தமிழ்ச் சமூகத்தில் ‘சாதி’ ஒரு தீர்மானகரமான சக்தி; சமூக, பண்பாட்டுத் தளங்களில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் செயல்படும் முதன்மையான கருதுகோள். இத்தகைய வலிமையான சாதியைப் பற்றி தமிழர்களின் விருப்பத்திற்குரிய கேளிக்கை ஊடகமான சினிமா வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஒருவேளை பேசினால்... ‘சூரிய வம்சம்’, ‘நாட்டாமை’, ‘சின்னக்கவுண்டர்’, ‘தேவர்மகன்’, ‘முதல் மரியாதை’, ‘பசும்பொன்’, ‘கோவில்’, ‘வேல்’, ‘சண்டைக்கோழி’, ‘வம்சம்’, ‘சுந்தரபாண்டியன்’... என்று ஆதிக்கச் சாதிக்காரர்களின் பண்பாட்டை விதந்தோதிதான் பேசியிருக்கிறது. தமிழ் சினிமா தொடர்ந்து பட்டியல் சாதியினரை இழிவாகவும் சுரண்டும் ஆதிக்கச் சாதியினரை பெருமிதமாகவுமே கதை செய்து வந்திருக்கிறது.
குறிப்பாக ‘எஜமான்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘முதல் மரியாதை’ போன்ற படங்களில் தாழ்த்தப்பட்டோரை இழிவுசெய்யும் காட்சிகள் இருந்தபோதும் அவை எவ்வித எதிர்ப்புமின்றி வணிகரீதியில் வெற்றிகரமான படங்களாக அமைந்தன. விதிவிலக்காக, சாதிவாரியான பட்டியலில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பட்டியலிடப்பட்ட மக்களுக்கும் பண்பாடு, இசை, காதல், வாழ்க்கை என்பதெல்லாம் இருக்கிறது என்று தமிழ் சினிமா மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பேசியிருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று ‘கௌரவம்’ என்கிற சினிமாவின் வழியே இப்போது அமைந்திருக்கிறது. அவ்வகையில் ‘கௌரவம்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வரவு என்றே சொல்லலாம்.
ஒரு தலித் இளைஞன், ஒரு வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அண்மையில் வன்னியர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு சென்று தலித் மக்கள் வாழும் இடங்களில் குடிசைகளைத் தீயிட்டு, பொருட்களைச் கொள்ளையிட்டு, சூறையாடி ஒரு பெரிய காட்டு வன்முறையை நிகழ்த்தியதை நாமறிவோம். ஆதிக்கச் சாதியினரின் இதுபோன்ற வெறியாட்டங்கள் அவர்கள் வீட்டுப்பெண், தலித் இளைஞனைக் காதல் கொள்ளும் சமயங்களில் பெரும் வன்கொடுமையாக வெடித்து உயிர்களைப் பலிகொள் வதில் முடிகிறது. இது தமிழகம் என்றில்லை, இந்தியா முழுவதும் சாதி உணர்வில் இறுகியவர்களிடம் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த உறுத்தலுமின்றி பெற்ற மகளைக் கொன்றுவிட்டு ‘கௌரவக் கொலை’ என்று கௌரவமான பெயர் வேறு சூட்டிக் கொள்கிறார்கள். சற்றும் நாகரிகமில்லாத காட்டுமிராண்டித்தனம் எப்படி கௌரத்தில் சேரும் என்று தெரியவில்லை. ‘கௌரவம்’ படம் இதுபோன்ற கௌரவக் கொலைகளை சாதி மறுப்புக் கண்ணோட்டத்திலிருந்து பேசுகிறது. காதல் ஒரு குற்றமல்ல என்ற உணர்வு நிலையிலிருந்து, ‘கௌரவம்’ சாதி வன்முறையைப் பார்க்கிறது.
படத்தில் உயர்சாதிப் பெண்ணாக வரும் ராஜேஸ்வரி, சண்முகம் என்ற தலித் இளைஞனைக் காதலித்ததற் காக, ராஜேஸ்வரியின் அண்ணன் அவர்கள் இருவரையும் வெட்டிக் கொலைசெய்து ரகசியமாகப் புதைத்துவிடுகிறான். சண்முகத்தின் நண்பனான அர்ஜூன், சண்முகத்தை தேடி கிராமத்துக்கு வருகிறான். சண்முகமும் ராஜேஸ்வரியும் காணாமல் போயிருப்பதை அறிந்து, அர்ஜூனும் அவனது பார்ப்பன நண்பனான வெங்கியும் கிராமத்தில் ஆற்றோரத்தில் ‘டென்ட்’ அடித்து தங்கி, அதன் பின்னணியை ஆராய்கிறார்கள். ஒரு கட்டத்தில் வள்ளியின் ஆட்டிசம் பாதிப்புள்ள தம்பியின் ஓவிய நோட்டிலிருந்து கிடைக்கும் குறிப்புகளை வைத்து சண்முகமும் ராஜேஸ்வரியும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முடிவுசெய்து, நண்பர்கள் உதவியுடன் அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் கதை.
உயர் சாதிப்பெண்ணை தலித் இளைஞன் காதலிக்கும்போது வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி வந் துள்ள படங்களாக ‘பாரதி கண்ணம்மா’, ‘காதல்’, ‘கூடல் நகர்’ ஆகிய 3 படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. பாரதி கண்ணம்மாவில் பாரதி தற்கொலை செய்துகொள்கிறான். ‘காதல்’ படத்தில் முருகன் பெரிய வன்முறைக்கு ஆளாகி பைத்தியமாகிறான். கூடல் நகரில் அந்த இளைஞன் பேருந்தில் வைத்துக் கொல்லப்படுகிறான். இவற்றில் ‘காதல்’ ஆதிக்கச் சாதியினரின் கூட்டு வன்முறையை மிக சிறப்பாகக் காட்சிப்படுத்திய படம். தமிழ் சினிமாவில் முன்னும் பின்னுமாக ‘காதல்’ வெளிப்படுத்தும் சாதி
வன்முறையின் நிதர்சனம் இதுரை வேறெப்போதும் நாம் திரையில் காணாதது.
‘கௌரவம்’ படத்தில் மாசி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அந்தக் கிராமத்தில் இரட்டைக்குவளை முறை இன்னும் நடைமுறையில் இருப்பதை சொல்லி அதிர்ச்சியூட்டுகிறது. சண்முகத்தைத் தேடி கிராமத்துக்கு வரும் அர்ஜுனும் வெங்கியும் கிராமத் தின் சாதி இறுக்கத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆதிக்கச் சாதிக்காரர்களில் ஒருவராக அல்லது அவர்களின் ஏவலாளாக அவ்வூரில் போலிஸ் இன்ஸ்பெக்டர் இருக் கிறார்.
ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருப்பதை வெளிப்படையாக இப்படம் பேசுகிறது.
சேரி மக்களின் தரப்பில் சண்முகத்தின் தந்தை, மாசி, வள்ளி, அவளது ஆட்டிசம் பாதிப்புள்ள தம்பி என்று சில பாத்திரங்கள் அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாசி பாத்திரத்தில் வருபவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதிக்கச் சாதியினரின் தீ வைப்புக்கு சேரி ஆளான பின்பு சேரிமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மது அருந்தி விட்டு வரும் மாசி பேசும் வசனங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அறச் சீற்றமாக வெளிப்படுகிறது.
ஆனால், படத்தின் மையமான அரசியலில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துவதுபோன்ற மாசியின் பேச்சை இடை மறிக்கும் அர்ஜூனும் யாமினியும், மாசிக்கு புத்திமதி சொல்லும் காட்சிகள் இயக்குநரின் மேல்தட்டு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதோடு எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கிறது. தான் சென்னையில் வாழ்ந்த காலங்கள் குறித்து மிக மகிழ்ச்சியாக அதைப் பகிர்ந்துகொள்கிறான் மாசி. சென்னையை அன்னை என்கிற அளவில் பெருமிதத்துடன் சொல்கிறான். ஆனால், சென்னையிலும் சாதி இன்னும் நுட்பமான இடங்களில் / வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சென்னையில் இரட்டைக்குவளைதான் இல்லை; சாதி இருக்கத்தான் செய்கிறது.
சண்முகமும் ரஜேஸ்வரியும் சடலமாக மீட்கப்படும் காட்சி பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய ஒரு காட்சி. ஆனால், அப்படிப்பட்ட அனுபவத்தை படம் தரவில்லை. காரணம் சண்முகம், ராஜேஸ்வரியின் முகங்கள் காட்சிகளில் அழுத்தமாக வைக்கப்படவில்லை. ‘காதல்’ படத்தில் அவர்களின் விடலைக் காதலை ரசிக்கும்படியாக சொல்லிவிட்டு, பின் அவர்களின் மீது வன்முறை ஏவப்படும்போது படம் பார்ப்பவர் களுக்கு முருகன், ஐஸ்வர்யா தரப்பு நியாயங்களோடு படத்துடன் ஒன்ற முடியும். ஆனால், ‘கௌரவம்’ படத்தில் சண்முகம் ராஜேஸ்வரி காதல் ‘ஃளாஷ்பேக்’ முறையில்கூட காண்பிக்கப்படவில்லை. மாறாக கதைக்கு அவசியமற்ற அர்ஜூன், யாமினி காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரிய பலவீனம் என்று இதைச் சொல்லலாம்.
உண்மையில் படத்தின் நாயகனே சண்முகம்தான், நாயகி ராஜேஸ்வரிதான், அவர்களின் காதல்தான் கதையின் அச்சாணி என்கிறபோது அதைக் காட்சிகளில் விவரிக்காமல், அவர்கள் கொல்லப்படும் சம்பவத்தை மட்டும் அறையிருட்டில் காண்பிக்கும்போது, அந்தத் துயரில் பார்வையாளர்களால் முழுமையாக ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. படத்தின் பிரதான பாத்திரமான சண்முகத்துக்கு ஒரு குளோஸ் அப் காட்சிகூட இல்லை என்பது பெரிய அபத்தம். ராஜேஸ்வரியின் அண்ணனால் தாக்கப்பட்டுக் கொல் லப்படும் காட்சியில்கூட சண்முகத்தின் முகம் அரையிருட்டில் காண்பிக்கப்படுகிறது. ஒரு வசனம் கூட அந்த கேரக்டருக்கு இல்லை. திரைக்கதையின் பெரிய பலவீனம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். சண்முகம் என்பவனின் மரணம்தான் பார்வையாளர்களை திரை முன்பு ஆவலோடு உட்காரவைக்கும் என்னும் நிலையில், சண்முகம் ராஜேஸ்வரி இருவரின் சித்தரிப்பு இருட்டடிக்கப்பட்டுள்ளது திரைக்கதையின் பெரிய பலவீனம்.
சண்முகம் ராஜேஸ்வரி தரப்பு நியாயங்களை, அவர்களின் காதலை சொல்லி, படம் பார்க்கும் ஆண் தன்னை சண்முகமாகவும் பெண் தன்னை ராஜேஸ்வரியாகும் உணர வைக்கப்படும்போதுதான் அவர்கள் காதலும் மரணமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். படத்தை வெற்றிப்படமாக ஆக்கியிருக்கக் கூடிய விஷயம் அதுதான். ராதாமோகன் இந்தச் சித்தரிப்பில் கோட்டை விட்டிருக்கிறார்.
படத்தில் நமக்கு ஈர்ப்பு இல்லாமல் செய்யும் அடுத்த காரணி அர்ஜூனாக வரும் நடிகர். அறிமுக நடிகரான இவரது பங்களிப்பு இந்தக் கதைக்குப் போதுமானதாக இல்லை. அர்ஜூன் பாத்திரத்தில் நமக்கு அறிமுகமான, தமிழ்நாடு சாயலுள்ள இளைஞன் தோற்றத்தில் யாராவது நடித்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிட தோதாக அல்லு சிரிஷ் என்ற கதாநாயகனை தமிழில் அறிமுகம் செய்து ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். அவர் தனது பாத்திரத்தின் தன்மையே தெரியாமல் இன்ஃபோசிஸ் ஊழியரைப்போல வந்துபோகிறார். கல்லூரி நண்பர்கள் கூட்டத்தில் ஒரு டர்பன் கட்டிய சிங்கைக் காண்பிப்பது, மாணவர்களின் குரூப் டான்ஸ், மீடியா படையெடுக்கும் காட்சி, அர்ஜுன் யாமினி காதலின் நாடகத்தன்மை போன்றவை ஒரு வேளை இந்தப் படம் தோற்றால் அதற்கான காரணங்களில் சிலவாக அமையக்கூடும்.
கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் முகாமிடுவது, அதைத் தொடர்ந்து கிராமத்துக்கு மீடியாக்கள் படையெடுப்பது போன்ற காட்சிகள் மிக செயற்கையாக இருக்கின்றன. அண்மையில் நடந்த தர்மபுரி வன்முறைகளின்போது மீடியா என்ன பாத்திரம் வகித்தது என்பதைக் கண்கூடாகக் கண்டோம். யதார்த்தத்தில் கிராமங்களில் நடைபெறும் இதுபோன்ற சாதி வன்கொடுமைகளில் ஆதிக்கச் சாதிப் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ராஜேஸ்வரி குடும்பத்திலுள்ள அவரது அம்மா, அண்ணி இருவரும் ராஜேஸ்வரி கொல்லப்பட்டதை ஏற்காதவர்களாக காண்பிக்கப்படுவது நம்ப முடியாததாக இருக்கிறது. ‘காதல்’ படத்தின் இறுதிக்காட்சி இதை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தது
மேலும், படத்தில் வன்முறையை உற்பத்தி செய்யும் களமான ஆதிக்க சாதி ஊர் மனிதர்களின் பங்கேற்பும், அதை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுவிட்ட சேரி மனிதர்களின் எதிர்வினை முகபாவங்களும் வசனங்களும் திரைக்கதையில் நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை. அவர் களும் வெறுமனே வந்துபோகிறார்கள்.
சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் கூட்டு வன்முறையின் உச்சபட்ச வடிவமே கௌரவக் கொலைகள். ஆனால், இந்தப் படம் இத்தகைய கொலைகளைக் குடும்பத்திலுள்ள ஒருவனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவாகக் காட்டுகிறது. ராஜேஸ்வரியின் தந்தையாக பசுபதி பாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் இக்கொலையை மகனுக்கு மூடி மறைக்கிறவராக காண்பிக்கப்படுகிறது. கூட்டு வன்முறையில் ஈடுபடும் ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக, கூட்டு அபராதம் போன்ற அரசியல் தீர்வு களும், வன்கொடுமை தடுப்பு யுக்தி களும் பரிந்துரைக்கப்பட்டுள்ள விழிப்புபெற்ற காலகட்டத்தில் கௌரவக் கொலைகளை தனிப் பட்ட, உணர்ச்சிவயப்பட்ட செயல் பாடுகளுள் ஒன்றாக காண்பிக்கப் படுவது கௌரவம் படத்தின் மிகப் பெரிய பிழை.
குறிப்பாக சேரி தீக்கிரையான பின்பு மக்கள் குழுமியிருக்கும் காட்சியில் மாசி பேசுவதன் எதிரொலியாக பல் வேறு தலித் குரல்களை ஒலிக்கச் செய்திருக்கக் கூடிய சாத்தியங்கள் இத்திரைக்கதைக்குள் சாத்தியம். ஆனால், இயக்குநர் அவர்களை மாபெரும் மௌனத்தில் ஆழ்த்துகிறார்.
இப்படத்தின் விளம்பர போஸ்டர்களில், ஈழத்தின் முள்வேலி முகாம் களை நினைவுபடுத்தும்விதமாக, முள்வேலி வளையத்துக்குள் படத்தின் கதாபாத்திரங்கள் நிற்பதுபோன்று காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பிரச்சனை முள்வேலி தடுப்பு அல்ல, உத்தப்புரம் போன்ற சுவர்கள்தான். அச்சுவர்களும்கூட இத்திரைக்கதைக்குள் வரவில்லை. தர்மபுரி சேரி எரிப்பை நினைவூட்டும் காட்சிகள் படத்தில் இருப்பதால், அதை மையப்படுத்தி, எரிக்கப்பட்ட சேரியின் பின்னணியில் கதாபாத்திரங்கள் உலவுவதான போஸ்டர்களைக்கூட ராதாமோகன் யோசித்திருந்திருக்கலாம்.
சண்முகம் என்கிற தலித் நண் பனின் சாவுக்கு அர்ஜூன் என் கிற பிற்பட்ட சாதி இளைஞன் நீதிகேட்டுப் போராடுவதில் இரண்டு செய்திகள் உள்ளன. தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து பிற்பட்ட சாதியிலுள்ள முற்போக்கு ஆற்றல்களும் பணியாற்ற வேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று சிக்கலான ஒன்று. தலித் மக்களுக்காக கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி சிந்தனையாளர்கள், திராவிட இயக்கங்கள் போராடியதன் தொடர்ச்சியில் இன்று தலித்துகளே தங்களுக்கான இயக்கங்களைக் கட்டியெழுப்பியுள்ளனர். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளில் இத்தகைய இயக்கங்களின் முன்முயற்சியாலேயே அவை வெளியுலகத்துக்கு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நண்பன் என்கிற அடிப்படையில் அர்ஜூன் இப்பிரச்சனைக்காகப் போராடுவதாகக் காட் டப்படும் சமகாலக் கதையில் எங்குமே தலித்துகளின் திரளான பங் கேற்பு, அரசியல் அமைப்புகளின் பங்கேற்பு இல்லாதது போல காண்பித்திருப்பதை, வணிக சினிமா வின் சமரசங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்வதா? திரைக்கதையின் சறுக்கலாக எடுத்துக் கொள்வதா?
இயக்குநர் சாக்குத்துணியால் மறைக்கப்பட்ட அம் பேத்கர் சிலையை நுட்பமாக காட்சிப்படுத்தவும் செய்கிறார். அதே வேளையில், அம்பேத்கரை கொண்டாடி பிளக்ஸ் போர்டுகள் வைத்து அடையாளப்படுத்திக் கொள்வது தற்கால நிதர்சனமாக உள்ள நிலையில் அப்படிப்பட்ட அடையாளம் இல்லாத சேரியாக ஒன்றை இப்படம் காண்பிக்கிறது.
நான் முதலில் குறிப்பிட்டதுபோல சாதி வன்முறையின் குறிப்பிடத்தகுந்த ஒரு கலை ஆவணமாக ‘கௌரவம்’ படத்தை ஏற்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. நல்ல படம் என்று சொல்லிவிட்டு அதன் குறைகளைப் பட்டியலிடுவது நமது நோக்கமும் அல்ல. அரிதிலும் அரிதாக தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகரமான முயற்சிகளாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்கிற பதற்றமே இவ்விமர்சனம்.
இதைப்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதை கொண்ட படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறும் அனைத்து தந்திரங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஏனெனில், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள ரிஸ்க் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக் களத்தின் தன்மை அப்படிப்பட்டது.
இத்தகைய படங்கள் வணிக சமரசங்களுடன் வெற்றிப்படமாக பட்டிதொட்டி, ட்டி.டி.ஹெச், டிவி, இணையம் என்று எங்கும் பரவவேண்டியது அரசியமும்கூட. அவ்வாறு வெற்றிபெறுவதன் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் பேசாத பகுதி களைப் பேச மற்றவர்களும் முயற்சி செய்வார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள், வரவேற்பைப் பெறாமல் பெட்டிக்குள் முடக்குவதிலுள்ள அபத்தமும் நிதர்சனமும் கவலைக்குரிய அம்சங்கள்.
நான் இந்தப் படத்தை என் நண்பருடன் வெளிவந்த அன்றே மாலைக்காட்சியில் பார்த்தேன். மதுரையில் புகழ்பெற்ற நவீன 7.1 ஒலி அம்சங்களைக் கொண்ட அந்த திரையரங்கில் எங்களோடு சேர்த்து ஒரு 200 பேர் படம் பார்த்திருந்தால் அதிசயம். பெரிய நிறுவன தயாரிப்பு என்றாலும் இப்படத்துக்கு போதுமான அளவில் விளம்பர முயற்சிகள் செய்யப்படவில்லை. பிரகாஷ்ராஜ், ராதாமோகன் இருவரும் கலந்துகொண்ட ‘நீயா நானா’ விஜய் டிவி நிகழ்ச்சியே இப்படத்துக்கு கிடைத்த குறிப்பிடும்படியான விளம்பரம்.
குறைகள் இருந்தாலும் ஆட்டிசம் தொடர்பான கவனம் குவிப்பது, ஊர் சேரி முரண்பாட்டை துல்லியமாக பேசு பொருளாக்கியது, தீண்டல் தீண்டாமையில் ஆதிக்கச் சாதியினர் கைக்கொள்ளும் அயோக்கியத்தனத்தை தலித் பாத்திரங்களின் விமர்சனமாகக் கதைக்குள் வைத்தது... என்று பல தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக வந்திருக்கும் தமிழ் சினிமா என்றுதான் ‘கௌரவம்’ படத்தைச் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக