திங்கள், 1 ஜூலை, 2013

உதிரிகளின் அரசியலும் - நீதியற்ற திரைப்படங்களும்


தமிழ் சினிமாவை குறித்துப் பேசுவதென்பது இயல்பாகவே தமிழக அரசியல் குறித்துப் பேசுவதாக ஆகிவிடுகிற நிகழ்வு என்பது புதிராகவும், வியப்பாகவும் ஒருவகையில் அவசியமானதாகவுமே இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமிடையே உள்ள பிணைப்பு போன்றே முக்கியமானது ஒன்று உண்டு. அது தமிழ்சினிமா பாத்திரங்களாக தொடர்ந்து தோன்றிவரும் தமிழக அரசியல் இயக்கங்களின் தொண்டர்கள், தோழர்கள், இன்னபிறர் போன்றோர் பற்றிய சித்தரிப்பு.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரின் செல்வாக்கு மிகுந்த காலகட்டங்களுக்குப் பிறகு ருத்ரய்யா, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் தமிழில் யதார்த்த சினிமாவிற்கான பரிசோதனைகளைத் துவக்கிய பிறகும் 1980களில் வெளிவந்த 1. சத்யா (சுரேஷ் கிருஷ்ணா - 1988) 2. ஒரு கைதியின் டைரி (பாரதிராஜா - 1985) போன்ற படங்கள் முந்தைய நாயக வழிபாட்டு தமிழ்சினிமா மரபின் தொடர்ச்சியாக மேற்கூறிய அரசியல் இயக்கத் தொண்டர்கள் பற்றிய கதைக்களத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்தன.

திராவிட இயக்க கருத்தாக்கங்கள் செல்வாக்குப் பெற்ற தமிழ்த்திரைச் சூழலில் திராவிட கட்சிகள் அதிகாரத்தில் இருந்த சூழலில் சமூகம் எண்ணற்ற உள்முரண்பாடுகளுடன் திணறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. படித்த, வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கையும் அவர்களின் போராட்டங்களும் பல்கிப் பெருகிக் கொண்டிருந்த சூழலில் வெளிவந்தவைதான் மேற்சொன்ன சத்யா (மற்றும்) ஒரு கைதியின் டைரி. அரசியல் இயக்கங்கள் குறித்துப்பேச முற்பட்ட இயக்குனர்கள் யாரும் அவர்களின் கொள்கை முழக்கங்கள், லட்சியங்கள் அவற்றின் குறைபாடுகள் ஆகியன குறித்த ஆழமான விசாரணைகள் எதையும் தோற்றுவிக்கவில்லை. ஒன்றிரண்டாக அவ்வாறு தோன்றியவையும் (‘‘அச்சமில்லை அச்சமில்லை’’ கே.பாலசந்தர்-1984) இயக்குனர்களின் தன்னிலை சார்ந்த (பார்ப்பனர் x சுயமரியாதை / திராவிட இயக்கங்கள்) கேள்விகளையே கொண்டிருந்தன. அவற்றை சமூகம் சார்ந்த, அறவுணர்வு சார்ந்த கேள்விகளாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், பார்ப்பனத் தன்னிலைகள் கொண்டிருக்கும் கேள்விகள் திராவிட இயக்க சீரழிவுகளைவிட மிகுந்த ஆபத்தானவை.

‘‘ஒரு கைதியின் டைரி’’ யை எடுத்துக் கொள்வோம். அந்தோணி என்கிற (கமல்ஹாசன்) ஒரு அரசியல் கட்சியின் தீவிரத் தொண்டன் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் இயங்குகிறான். தலைவரின் மீதான வழிபாட்டுடனும்கூட. அந்த கட்சியின் தலைவர் மற்றும் அவரது தொழில்முறைக் கூட்டாளிகளான சிலரும் சேர்ந்து அந்தோணியின் மனைவியை பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அந்தோணி தனது குமுறலை அவர்களிடமே சென்று முறையிடும் அளவு பாமரனாக இருக்கிறான். உண்மையறிந்து கோபப்படுகிறான். தொழில்முறை கூட்டாளிகள் அந்தோணியை சிறைக்கனுப்புகிறார்கள். சிறைவாசம் முடிந்து வயோதிகனாக வெளியில் வரும் அந்தோணி பழிதீர்க்கிறான்.

‘‘சத்யா’’ வில் தன்னை நம்புகிற ‘‘சத்யா’’ வை வைத்து தன் அதிகார போட்டியாளர்களைப் பற்றிய ஆவணங்களை களவாடி அதன் மூலம் நடக்கும் பேரத்தில் தேர்தலில் நிற்கும் ‘‘தண்யாணி’’ என்ற கதாபாத்திரத்தையும் அவரது தொழில்முறை கூட்டாளிகளையும் ‘‘சத்யா’’ பின்னர் பழிதீர்ப்பதை கொண்டு படம் முடித்து வைக்கப்படுகிறது.

கைதியின் டைரியில் மோசமான அரசியல்வாதிகள் X நல்ல போலீஸ் அதிகாரி (மகன் கமல்ஹாசன் பாத்திரம்) என்ற சமன்பாடு இருப்பதுபோல சத்யாவில் மோசமான அரசியல்வாதிகள் X நல்ல போலீஸ் (சத்யாவின் மைத்துனர்) நீதி தவறாத நீதிமன்றம் போன்ற சமன்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன.

இத்தகைய சமன்பாடுகளே இத்தகைய படங்களின் இறுதிக் காட்சியை தீர்மானித்து பார்வையானவை எவ்வித பதட்டமும், சமகால வாழ்வு குறித்த குழப்பங்களும் இன்றி ‘‘நல்லபடியாக’’ வீட்டுக்கு அனுப்புகின்றன. இந்தச் சமன்பாடானது மோசமான அதிகாரிகள் X நல்ல அரசியல்வாதிகள் என்பதாகக் கூட மாறலாம். அத்தகைய கருக்களுடனும் கூட சில படங்கள் வந்திருக்கலாம்.

இச்சூழலின் தொடர்ச்சியாக 1990-ல் பாரதிராஜாவின் ‘‘என் உயிர்த் தோழன்’’ வெளிவருகிறது. நீண்ட தொடர்ச்சி கொண்ட பாரதிராஜாவின் படைப்புச் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலவெளிக்குப் பின்னர் மிகுந்த சிக்கலானதாகவும், கடும் விமர்சனத்துக்குரியதாகவும் மாறியுள்ளது. ஆனால் ‘‘என் உயிர்த் தோழன்’’ ஒரு தனித்துவமான படம் என்பதைச் சொல்லியாக வேண்டும். சென்னை சேரிப்புறத்தில் வசிக்கும் ரிக்ஷா தொழிலாளியான நாயகன் (தர்மன்) ஒரு அரசியலமைப்பின் தீவிர தொண்டனும்கூட. தலைவரையும், கட்சியையும் தீவிரமாக வழிபாடு செய்யவும், தன் பகுதி மக்களை அக்கட்சியின் வாக்கு வங்கியாக ஒப்புக் கொடுக்கவும் செய்கின்ற அவன் அந்தக் கட்சியின் தலைவர் உள்ளிட்டோரின் சதித்திட்டத்தின்படி ஒரு தேர்தல் வெற்றிக்காக தன் சொந்த கட்சிக்காரர்களாலும், நண்பனாலும் படுகொலை செய்யப்படுகிறான்.

சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் குறித்த நேர்த்தியான பதிவுகள் ‘‘அவர்களின் அன்பு’’ இயக்கங்களின்பால் கொண்ட நம்பிக்கை, உழைப்பு ஆகியன சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகனை (தர்மன்) கொன்ற பிறகு அதற்கான கூலியாக வாங்கிய பணத்தை எடுத்து, எடுத்துப் பார்த்தபடி கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு அகலும் நண்பன் பாத்திரம் (சார்லி) பின்னர் குற்றவுணர்வின் தீவிரம் குறையாமல் அழுது அரற்றியபடியே தொடரும் காட்சிகள். பின்னர் கொல்லப்படும் வரை அப்பாத்திரத்தின் முகத்தில் தெரியும் மீதி ஆகியன நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கதாநாயகன் (தர்மன்) தனது தலைவரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் காட்சியும் அத்தகைய ஒன்றுதான். தலைவர் கோயில் சன்னிதானம் போன்ற காரிடாரில் ஒரு மின் ஒளி வட்டத்துடன் அமர்ந்திருப்பார். நமது தொண்டன் தொலைவில் நின்று கணீர் குரலில் அவர் போடும் கட்டளைகளை கேட்பது போன்றவை நமது வழிபடும் மரபின் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு அரசியலின் காட்சியாக நிற்கிறது.

தொண்டன் வஞ்சகமாக கொல்லப்படும் காட்சியுடன் படம் முடித்திருக்க வேண்டும். ஆனால் பார்வையாளர்களை அப்படி அனுப்பிவிட பாரதிராஜாவுக்கு மனமில்லை போலும். சேரியே திரண்டெழுந்து தலைவர் உள்ளிட்ட மற்றவர்களை பழிதீர்த்தபின் படம் முடிகிறது. ஹீரோ போன்ற தோற்றமும், வசீகரமான பேச்சும் கொண்டு அதன் வழியாக பெண்களை வசீகரித்து ஏமாற்றும் ஒருவன் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவன் என்ற நிலையை அடையும் அதே வேளையில் அவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டு, அக்கட்சிக்காக தன் எல்லா சக்தியையும் செலவிடுகிற ஒரு தொண்டன் பயன்படுத்தப்பட்டு பின் கொல்லப்டுகிறான்.

வழிபாட்டு அரசியலை பின்னணியாகக் கொண்ட 80-களின் படங்களுக்குப் பிறகு வந்தவை அத்தகைய தீவிர வழிபாட்டை கதைக்களனாக கொண்டிருக்கவில்லை. பின்னர் வழிபாடு என்பதே அத்தகைய ஊழல் அதிகார அமைப்பில் பங்கு பெறுவதற்கான கருவியாகவும் மாறிவிட்டிருதது.

இன்றைக்கு அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்டிருக்கின்றன. கட்சிகளே காட்சி ஊடகங்கள் நடத்தவும், நிர்வகிக்கவும் தலைப்பட்டிருக்கின்றன. அதற்கான நிதிப்புலம், அதிகாரம் இவற்றிற்கான சமரசங்களிலும், சமரசத்தின் பலாபலனை அடைவதற்கும் மிகுந்த போட்டி நிலவுகிறது. தலைவன் முதல் கடைசித் தொண்டன் வரை பலாபலனில் தனது பங்கைப் பெற தீவிர முயற்சிகளும், போராட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஓட்டுவாங்கிச் சம்பாதிக்கத் துவங்கினால் இவர்கள் ஓட்டுப் போட்டு ‘எதாவது’ பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய சூழல் பற்றிய விமர்சனங்கள், நையாண்டிகளோடு 90-களில் ஒரு சில படங்கள் வந்தன. 1. மக்கள் ஆட்சி ( R.K.செல்வமணி-1995) 2.அரசியல் (R.K..செல்வமணி-1997) ஆகியன.

1991-1995 காலகட்டத்தில் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தையும் ஓவர்டைம் வேலை செய்து எழுதித் தீர்க்க வேண்டிய அளவு ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற்று முடிந்தது.மேற்சொன்ன படங்கள் இத்தகைய சூழலை, கவலையை கேலிச் சித்திரமாகத் தீட்ட முற்பட்டன. இத்தகைய படங்கள் கூலிப்படைச் செயல்பாடுகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலுள்ள ஆழமான பிணைப்பை குறித்து கேள்விகளை கொண்டிருந்தன. அதுவே அந்த நையாண்டியின் ஆதாரமாகவும் இருந்தது. எனினும் படத்துடன் துவங்கும் கேள்விகள் படத்துக்குள்ளேயே வழங்கப்படும் ‘‘நீதி’’யுடன் முடித்து வைக்கப்பட்டு விடுகின்றன.

நீதியற்ற அரசியலதிகாரம், நீதித்துறை, காவல்துறை, அரசு எந்திரச் செயல்பாடுகள் போன்றன மீது சமரசங்களற்ற கேள்விகளுடன் வந்த படங்களுள் முக்கியமானது ‘‘சாமுராய்’’ (பாலாஜி சக்திவேல் 2002). நமது ஊழல் மலிந்த சமூக அமைப்பில் விடுதலையின் அறமதிப்பீடுகளின் துவக்கம் என்பது சமூகத்தைப் புரிந்துகொண்ட உருவாக்கப்பட வேண்டிய மாற்றுச்சூழல் குறித்த தேடலும், அக்கறையும் கொண்டவர்களாலேயே சாத்தியப்படக் கூடியது என்ற புரிதலை முன்வைத்தது.

நீலம்பாரித்த நமது தமிழ்சினிமாவின் பிம்பவழிபாட்டு விஷச்சூழலில், ‘சாமுராய்’கள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் வியப்பும், நம்பிக்கையும் தருவதாய் அமைகின்றன. ‘சாமுராய்’க்கும் நாயக முக்கியத்துவம் உண்டு. ஆனால் அது கதையின் ஆதாரமான அறவுணர்வுகளால் சீரமைக்கப்பட்டு முன் வைக்கப்படுகிறது. நமது போராட்ட மரபின் தொடர்ச்சியாக வரும் நாயகர்களுக்கும் வழக்கமான பிம்ப நாயகர்களுக்கும் உள்ள வேறுபாடு கவனிக்கப்பட வேண்டியது.

‘‘சாமுராய்’’ படத்திற்கும் பிற படங்களுக்குமுள்ள முக்கியமான வேறுபாடு-சாமுராய் கட்சி அமைப்பிற்கு வெளியில் நின்று கட்சியையும், சமூகத்தையும் மதிப்பிடுவதில் உள்ள அரசியல் அறிவுதான்.

தமிழக அரசியல் குறித்தும், மிக தரம் தாழ்ந்துவிட்ட அதன் அந்தரங்க நடவடிக்கைகள் குறித்தும் வெளிவந்த ஒரு ஆர்ப்பாட்டமான கேலிச்சித்திரம் ‘புதுப்பேட்டை’ (செல்வராகவன் - 2006).

புதுப்பேட்டை சொல்வது இதுதான் - தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கோ, அதன் தலைவர் தொண்டர்களுக்கோ அறம், நீதி சார்ந்த எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான். வழக்கமாக தமிழ்சினிமாவில் வரும் நீதி நிலைநாட்டப்படுகின்ற இறுதிக்காட்சி கூட ‘‘புதுப்பேட்டை’’ யில் இல்லை.

அடியாள் வேலை செய்யும் தனது தந்தையாலேயே தனது தாய் கொல்லப்பட்டத்தைக் கண்டு பீதியுறும் மாணவனான கொக்கிகுமார் வீட்டிலிருந்து தப்புகிறான். பின்னர் பிச்சையெடுக்கிறான். 80-களில் கார் கண்ணாடி துடைத்துவிட்டு காசு கேட்கும் சிறுவர்களை அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்புகாட்டி வளர்க்கும் அப்பாவி பணக்காரன் யாரும் 2006-ல் இல்லைபோல் தெரிகிறது. அரவணைக்கத்தான் இல்லை. கார் துடைத்த கூலி கூட கொக்கிகுமாருக்கு கிடைக்கவில்லை. கழுத்தில் அழுக்குத் துண்டு கட்டிக்கொண்டு நடத்தும் ‘‘அம்மா.. கழுத்துல ஆபரேசன்’’ என்ற நாடகம் அமோகமாக ஓர்க் அவுட் ஆகிறது.

பிச்சையெடுக்கப் போன இடத்தில் கஞ்சா விற்பவர்களோடு சகவாசம்- பின்னர் சிறைவாசம். பின்னர் அடியாளாக பதவி உயர்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வாழ்வை அனுபவிக்கவும், அதிகாரத்தை ருசிப்பதற்காக எதிரிகளை ஒழித்துக்கட்டுவதுமாக கொக்கி குமாரின் தமிழக பிராண்ட் அரசியற் செயற்பாடுகள் சுவாரஸ்யமான காட்சிகளாயிருக்கின்றன.

நமது மாவட்டச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், கல்வி நிறுவனத் தந்தைகள் ஆகியோர் கொக்கி குமாரின் இளமைப் பருவத்தை தாண்டித்தான் வந்திருக்க வேண்டும்.

சிறு வயதிலேயே வன்முறையான வாழ்வுக்குள் தள்ளிவிடப்பட்ட ஒருவன், மிகுந்த பயமும், தைரியமும் கொண்ட முரண் உருவத்துடன் எவ்வாறு தமிழக அதிகார அரசியல் அமைப்பின் பகுதியாக / பிரதிநிதியாக மாறுகிறான் என்பதைச் சித்தரிக்கவே ‘‘புதுப்பேட்டை’’ முயலுகிறது.

ரவுடிகள் பற்றிய சித்தரிப்புகள்

தலைநகரம் (சுராஜ் - 2006) போன்ற ரவுடிகள் பற்றிய சித்தரிப்பை கொண்டிருக்கும் படங்கள் மிகுந்த ஆபத்தானவையாக இருக்கின்றன. பொதுவாக பழைய தமிழ்ப் படங்களில் இத்தகைய ரவுடிகளே வில்லன்களாகவும், இவர்களை எதிர்ப்பவர்களே கதாநாயகர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். சமூகம் தனது தார்மீக மதிப்பீடுகளை இழந்துவிட்டு அதே வேகத்தில் நல்லவர்கள், ரவுடிகளின் தியாக உள்ளம், ரவுடிகளின் சமூக அக்கறை போன்ற பிரிவுகளில் படங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ரவுடிகளுக்கென்று அறக்கோட்பாடுகள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் போன்ற மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வாடகைக் கொலையாளிகள் மனித நேயர்களாகவும், பண்புச் சிகரங்களாகவும் சித்தரிக்கப்படும் அபத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வின் மீதும், இருத்தலின் மீதும் தொடர்ந்து பெரும் சுரண்டலையும்,தாக்குதல்களையும், அழித்தொழில்களையும் செய்து வரும் இவர்கள் மீதான தமிழ் சினிமா இயக்குநர்களின் பரிவுப்பார்வை நமக்கு ரொம்ப வியப்பாக இருக்கிறது. இத்தகைய நியாயப்பாடுகளை ஒருபுறம் வைத்துக் கொண்டே மறுபுறம் போலீஸின் போலி என்கவுண்டர்களுக்கான நியாயப்பாடுகளையும் தமிழ்சினிமா தொடர்ந்து வழங்கி வருகிறது.

போதைப் பொருள் வணிகம், ஆட்கடத்தல், அரசியல் எதிரிகளை பழிதீர்க்கும் கூலிப்படைச் செயற்பாடுகள் போன்றவற்றால் சமூகத்திற்கு எவ்வித நலனும் இல்லை. ஆனால் நியாயமான ரவுடிகள் பற்றிய தமிழ்சினிமா சித்தரிப்புகள் பார்வையாளனை சிந்தனைப் பூர்வமாக சுரண்டத் தலைப்படுகின்றன.

மேற்சொன்ன ரவுடிகள் இன்னபிறரும் சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுவர்கள்தான் எனினும் கூட அவர்களின் செயல்பாடுகள் எளிய தனிமனிதனை எவ்விதங்களில் பாதிக்கின்றன, பதட்டமடையச் செய்கின்றன என்பதும் இதனின்று மீள்வது குறித்த கேள்விகளை சினிமாக்கள் ஆதாரமாக கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய பணிக்கு இயக்குநர்கள் நேர்மையுடன் செய்ய வேண்டியது. இத்தகைய உதிரிகள் எப்படிப்பட்ட சமூகத்தை கட்டிக் காப்பதற்கான / கட்டித் காத்துக்கொண்டிருக்கும் அதிகாரங்களினுடைய ஏவலாட்களாக இயங்குகிறார்கள்? என்பதை அம்பலப்படுத்துவதுதான்.

அத்தகைய முயற்சிகளின் துவக்கமாக அல்லது சிறு தூண்டலாக ‘‘புதுப்பேட்டை’’யைப் பார்க்க முடியும் என்று கருதுகிறேன். ஆனால் ‘‘புதுப்பேட்டை’’ வன்முறையை ஒரு சகிப்பாக மாற்றுகிற தொனி கவலையளிப்பதாகவும் உள்ளது. மொழிமாற்றுப்படமாக தமிழுக்கு வந்த ‘‘சத்யா’’ (ராம்கோபால் வர்மா)வையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகச் சொல்லலாம்.

(புதியகாற்று நடத்திய தமிழ் சினிமா அகமும் புறமும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

யுத்தம் செய் - தாமதமாக வந்த ஒரு பார்வையாளன்


நேற்று தான் யுத்தம் செய் பார்த்தேன். செய் நேர்த்தியுள்ள ஒரு படம் தான் . ஆங்கில திரைப்பட சேனல்கள் பார்த்து வளரும் ஒரு தலைமுறையை ஏமாற்றாத படம் என்று சொல்லலாம் . படம் பார்த்தபின் உடனடியாக சில கேள்விகள் எழுந்தன . அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்குறிப்பினை எழுதுகிறேன் .
1 .உயர்தட்டு மனிதர்களாக தென்படும் மருத்துவர்களான ஒய்.ஜி யின் குடும்பம் என்ன சாதி ?
2 .இளம்பெண்கள் கடத்தலில் மூளையாகவும் ,மிகுந்த பலனாளிகளாகவும் தோன்றும் காவல் அதிகாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் 'கை துண்டித்து ' தண்டனை வழங்கப்படாதது ஏன்?
3 .கடத்தலுக்கு உதவும் ஆட்டோ டிரைவர்கள் போன்றோருக்கு மட்டுமே கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுவது ஏன்?
4 .ஒய்.ஜீயும் அவர் மனைவி,மகன் ஆகியோர் மொட்டயடிதுக்கொள்வது, கருப்பு ஆடைகள் அணிவது ஆகியன எதன் குறியீடாக காண்பிக்கப்படுகின்றன?
5 .மருத்துவர் judaas , "......எங்களை போல் அறிவாளிகளால் முடியாதா?" என ஒரு இடத்தில பேசுகிறார் . அது யாரை குறிக்கிறது?

கரைப்பறவையாக தத்தும் நீர்ப்பறவை


ராமேசுவரம் அருகிலுள்ள தங்கச்சி-மடம் மீனவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முயற்சியாக நீர்ப்பறவை எடுக்கப்பட்டுள்ளது. கதை சமகால சம்பவங்களில் துவங்கி, பின்னர் 25 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்--களை நினைவுகூறும் பிளாஷ்-பேக் முறையில் சொல்லப்படுகிறது. எஸ்தர் என்கிற கிறித்தவ மீனவப் பெண்-ணின் நினைவடுக்குகளை மீட்டெ-டுக்-கும் துவக்கக் காட்சியில், வய-தான எஸ்தர் தன் வீட்டில் தனியே வசிக்கிறார். ஊரிலிருந்து மனைவி-யு-டன் வரும் அவர் மகன், தனக்கு அந்த வீட்டை விற்றுப் பணம் தரும்படி கேட்கிறான். அதை மறுக்கும் எஸ்தர், நள்ளிரவில் வீட்டு முற்றத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அழுது பிரார்த்தித்திருப்பதைக் கண்டு, சந்தேகம் கொண்டு, அந்த இடத்-தில் தோண்டிப் பார்க்கும்போது அதில் ஒரு எலும்புக்கூடு இருக்கிறது. போலீஸ் வருகிறது. எஸ்தரை விசா-ரணைக்கு அழைத்துச் செல்கிறது. ‘அந்தச் சடலம் தன் கணவர் அருளப்-பசாமியுடையது. அவரை நானே கொன்-றேன்’ என்கிறார். பிளாஷ்பேக் 25 வரு-டங்களுக்குப் பின்-னர் 1987க்குப் பயணிக்கிறது.
வாழ்வுக்கும் சாவுக்குமான மர-ணக்--கிணறு பந்தயம்போல வாழ நிர்பந்திக்-கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வைக் கதைக்களமாகத் தேர்ந்து கொண்டதற்காக இயக்குனர், சீனு ராமசாமி நமது பாராட்டுக்கு உரிய -வர். ஆனால், கடல்புரத்தோடு தொடர்-பற்ற சம-வெளி மனிதரான இயக்-குனர், மீனவர்கள் வாழ்வின் தனித்-துவமான பண்பாட்டு, அரசியற்--கூறுகளை அறிந்து-கொள்ள முயற்சிக்-காமல், தான் கேள்விப்பட்ட அல்லது தான் சொல்ல விரும்பிய மீனவ வாழ்வொன்றைத் தனது திரைப்படமாக வைத்துள்ளார்.
கதைப்படி 1987இல் 25 வயது இளை-ஞராக வரும் அருளப்ப-சாமி, நடுக்கடலில் படகில் சுட்டுக்--கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் மிச்சமாக லூர்துசாமியால் மீட்-டெடுக்-கப்படுகிறார். அந்தச் சிறு-வனுக்கு அப்போது 10 வயது என்று வைத்துக்கொண்டால் (காட்சியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனாகவே வருகிறான்). 1972இல் அவன் குடும்பம் நடுக்கடலில் சுடப்பட்டிருக்கிறது. சமகால மீனவர் வரலாற்றின் துய-ரத்தைக் காட்சிப்--படுத்த வந்த நீர்ப்-பறவை யின் அடிப்-படைத் தர்க்கம் இங்-கேயே காலியாகிவிட்டது. தரவு-களின்-படி ஈழத் தமிழர்கள் அகதிகளாக ராமே-சு-வரம் பகுதிக்குப் புகலிடம் தேடி வரத் துவங்கியது 1983இல்--தான்.
1983இல் மூன்று போக்குகள் துவங்கு-கின்றன. யுத்தம் தீவிரமடை-கிறது. இலங்கைத் தமிழர்கள் அகதி-களாகப் புலம்பெயர்கிறார்கள். இலங்-கையை ஒட்டிய கடல் பகுதி-யில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய (ராமே-சுவரம்) மீனவர்கள் இலங்-கைக் கடற்படையின் துப்-பாக்-கிச் சூட்டிற்குப் பலியாகத் துவங்கு-கிறார்கள். 1983இல் முனியசாமி என்கிற ராமேசுவரம் மீனவர் சுட்-டுக் கொல்லப்-படுகிறார். இதுவே இப்பகுதியில் முதன்-முத-லில் ஒரு மீனவன் சுடப்பட்டு இறக்கும் சம் பவம். அதிர்ச்சியடைந்த மீனவர்-கள் முனியசாமியின் உடலுடன் ராமே-சுவரம் ராமநாசுவாமி கோவி-லின் நான்கு ரத வீதிகள் வழியாக தாசில்தார் அலுவலகம் வரை ஊர்வல-மாகச் சென்றார்கள். முழக்கமிட்டார்கள். துப்பாக்கிச் சூட்டைத் தடுத்து நிறுத்தும்படி கோரிக்கை வைத்தார்கள். எதுவும் நடக்கவில்லை. துப்பாக்கிச் சூடுகள் இன்றுவரை ஒரு தொடர்-கதையாகவே ஆகிவிட்டன. அரசு, நிவாரணத் தொகை எதை-யாவது கொடுத்-து விட்டுத் தன் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறது.
அருளப்பசாமி ஒரு அகதிச் சிறு-வனாக மீட்கப்பட்டிருந்தால் அது 1983க்குப் பிறகே நடந்திருக்க முடியும். ஆனால், இயக்குனர் தன் வசதிக்-காக (?!) வரலாற்றை 11 வருடங்-களுக்குப் பின்னுக்கு இழுக்கிறார். கரையோர மீனவர்களின் வாழ்வைப் படமாக்குவது, மீனவர் மரணங்-களுக்கு எதிரான கேள்விகளை முன் வைப்பது, கிறிஸ்தவ, இஸ்லாமிய எளிய மக்களின் புறக்கணிக்கப்பட்ட குரல்களைத் தமிழ் சினிமாவில் அரங்கேற்றுவது என்கிற கட்டுப்பாடு-களுடன் படமெடுக்க வந்த சீனு ராம-சாமி அதற்கான கடின உழைப்பை வழங்-குவதில் பெரிய தோல்வி அடைந்-திருக்கிறார்.
கதை நிகழ்வதாகச் சொல்லப்படுகிற பகுதியில் வாழ்கிறவன் என்-பதால், யதார்த்--தத்துக்கும் திரையில் காட்டப்-பட்டிருக்கும் காட்சிகளுக்குமான முரண்-களை, அபத்தங்களை என்- னால் எளிதில் செரித்துக்கொள்ள முடியவில்லை. 1972 முதல் 1983 வரை என்று வெற்றிகரமாகத் துவங்கும் சீனுராமசாமியின் அபத்தக் கணக்கு தொடர்ந்த காட்சிகளில் பல்கிப் பெருகுகிறது. ராமேசுவரத்திலேயே இந்தக் கதையைப் படமாக்கச் சிறந்த வெளிகள் இருக்கின்றன. ஆனால், மணப்பாடு பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ராமேசு-வரம், தங்கச்சி மடத்திலிருந்து பிற ஊர்களுக்கு வேலை நிமித்தம் செல்-பவர்கள் பாம்பன் ரயில், பேருந்து பாலம் ஏதோ-வொன்றைக் கடந்து -தான் செல்லமுடியும். ஆனால், அருளப்பசாமியும் அவனது நண்-பனும் உப்பளத்தில் வேலை செய்-வதற்காக ஊரைவிட்டுக் கிளம்பும் காட்சி, ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு பாலத்தில் வைத்து எடுக்கப்பட்-டுள்ளது. தமிழ்நாட்டில் சினிமா பார்ப்பவர்களுக்குப் பல்வேறு காட்சி ஊடகங்களின் வாயிலாகப் ‘பாம்பன் பாலம்’ என்பது வெகு பரிச்சயமான ஒன்று. அப்படியிருக்க, ஏதோவொரு பாலத்தைப் பாம்பன் பாலம் என்று காண்பிப்பதில் உள்ள அபத்தத்தை சீனு ராமசாமி உணர்ந்திருந்தாரா என்று தெரியவில்லை.
முக்கியமானது, படம் நெடுகிலும் காண்பிக்-கப்படும் மீன்பிடிப் படகுகள் சிறு எந்திரம் பொறுத்தப்பட்ட ‘வல்லம்’ என்கிற வகையைச் சேர்ந்-தவை. இலங்-கையை ஒட்டிய கடற்-பகுதி வரை சென்று மீன்பிடிக்கப் பெரிய எந்திரம் பொருத்திய விசைப்--படகுகள்தான் பயன்படும். இந்த சிறிய வல்லங்களிலும் சரா-சரியாக 6 முதல் 25 பேர் வரை மீன்-பிடிக்கச் செல்வது வழக்கம். நீர்ப்பறவை அருளப்--பசாமியோ ஒற்றை ஆளாகவே படகில் போய் சுடப்பட்டு இறந்து போகிறார். மகனின் சடலத்தை மீட்டு வரும் லூர்துசாமியும் ஒற்றை ஆளா-கவே படகில் மீட்டு வருகிறார். மீன்பிடித் தொழிலின் ஆதாரமான அம்-சமே கூட்டு உழைப்பு மற்றும் வேலை-களைப் பகிர்ந்து செய்வதிலேயே அடங்கியுள்ளது.
ராமேசுவர மீனவர்களின் துயர் அறிந்த-வர்களுக்குத் தெரியும். மீன்பிடிக்கச் சென்றவர்கள் படகு -டன் காணாமல் போய்-விட்-டால், நான்கு அல்லது ஐந்து விசைப்-படகுகள் சேர்ந்துதான் காணா-மல் போனவர்களைத் தேடிச் செல்-வார்கள். சிறுவயது அருளப்-ப சாமியை நடுக்கடலில் அன-£தை-யாகச் சந்திக்கும் காட்சி-யிலும் லூர்துசாமியும் அவரது நண்பரும் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றிருப்-பார்கள்.
ராமேசுவர மீனவர்களின் அன்-றாட வாழ்வு குறித்த அறிதல் இன்-றியே அவர்களது பிரச்சினையை முன்வைக்கும் படமொன்றை இயக்கி வெளியிட்டுவிட்டார் சீனுராமசாமி. யதார்த்தம் வேறாக இருக்க, மீன--வர் வாழ்வு பற்றித் தனக்குக் கிடைத்-திருந்த கற்பிதங்களின் வழியே ராமேசு-வரத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர்.
மேலும், இராமேசுவரத்தைப் பொறுத்-தவரை மீன்பிடிப்பதில் உள்ளூர்க்-காரன், அகதி என்கிற பாகு-பாடுகள், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் இங்-குள்ள படகு-களில் தற்காலிகப் பணியாளர்-களாக மீன்பிடிக்கச் சென்று வரு-கின்றனர். படத்தில் காண்-பிக்-கப்படுவது போன்று ஒதுக்-கு---தல்கள் 1983இலும் இல்லை, இப்போதும் இல்லை. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோல தங்கச்சி -மடம் பகுதியில் மீன்பிடித் துறைமுகமும் எதுவும் இல்லை. தங்கச்சி மடத்தில் வாழும் மீனவர்-களும் இராமேசுவரம் துறைமுகம் வந்துதான் மீன்பிடிக்கச் செல்வர்.
ஈழப்போரின் தோல்வி எவ்-வளவு உளவியல் சோர்வைத் தமிழர்-களுக்கு ஏற்படுத்தியதோ அதற்கு இணையான தாக்கத்தைச் சமவெளி மனிதர்கள் மத்தி-யில் மீனவர்கள் மரணம் ஏற்படுத்தி-யுள்ளது. மீனவர் களின் கையறு நிலை, அர-சின் அக்கறையற்ற அணுகுமுறை, படகு முதலாளிகளின் நெருக்கடி ஆகியவை மீனவர்களை மரண விளிம்பை நோக்கி நாள்தோறும் நெருக்கு கின் றன.
இதைப் பார்வையாளனுக்குக் காட்சிகள் வழியாகக் கடத்துவதற்கு மிக நுட்பமாக வலை பின்னப்பட்ட ஒரு திரைக்கதை வேண்டும். நீர்ப்-பறவையில் அது இல்லை. சிறந்த நடிகர்கள், சிறப்பான ஒளிப்பதிவு, இசை, கடற்கரையின் அழகிய காட்சி-யமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. துண்டு துண்டாக இருக்கின்றன.
அண்மைக்காலத்தில் சாதி அடை-யாளம் இல்லாத ஒரு-வனை நாய-க-னாக்கி வந்த படம் என்று நீர்ப்பறவையைச் சொல்ல--லாம். துப்பாக்கிச் சூட்டில் உறவினர்-களை இழந்த அவன் பெயரற்ற ஒரு-வனாகவே லூர்து சாமியிடம் அடைக்-கலமாகிறான். பின்னர் தான் அவன் அருளப்பசாமி ஆகின்-றான். கடலுக்கும் மீன்--பிடிக்கும், கிறித்தவத்துக்குமான உறவு இயக்குனரால் ஆழமாக நம்பப்பட்டிருக்கிறது. அது காட்சி களில் விரிகிறது. சிறுபடகுகள் (வல்லங்கள்) செய்து விற்பவராக வரும் இஸ்லாமியர் பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனியின் டீக்கடைப் பேச்சுக்களின் வழியாகவே இயக்குனர் தனது அரசியலை முன்வைத்து உரையாடத் துவங்குகிறார்.
குண்டடிபட்டு இறந்த தன் மகனை, தன் கணவனை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட அந்த மூவரும் ஒருமித்து முடிவெடுக்கும் காட்சியில் அவர்கள், அவ்வாறு செய்வதற்கான முன்தீர்மான காட்சி--களோ பின்னணியான சம்பவங்களோ திரைக்-கதையில் அழுத்தமாகச் சொல்லப்பட-வில்லை.ஆனால் சமுத்திரக்கனியோ படகு முதலாளியோ டீக்கடைக்காரரோ பேசிய அரசியல் பிரக்ஞை, வசனங்-களைத் துளியும் உச்சரிக்காதவர்களாக நாயகனும் நாயகியும் இருக்கிறார்கள். தன் கணவன் மீன் பிடிக்கும் தொழில்-தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிற எஸ்தர், தன் வாழ்வின் வழியாக அதற்கு எந்த வொரு உள்நோக்கத்தையும் படம் நெடுகிலும் வெளிப்படுத்தவில்லை. சர்ச் கமிட்டியில் சேர வேண்டும் அதற்குப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே கடைசியாக அவனைக் கடலுக்கு அனுப்பி வைக் கிறாள்.
படத்தில் லூர்துசாமி-யுடைய-தாகவும் எஸ்தருடையதாகவும் வைக்கப்படும் மனித உடல் பற்றிய பார்வை ஒரு நடுத்தரவர்க்கப் பார்வை. அது சீனுராமசாமியோட பார்வையாக வேண்டுமானால் இருக்-கலாமே தவிர நிச்சயமாக ஒரு மீனவனுடைய மனவோட்டம் இல்லை. உடலை வீட்டில் புதைப்-பதற்--காகச் சொல்லப்படும் வலு-வற்ற இந்தக் காரணம்தான் நீர்ப்-பறவை திரைக்கதையின் அடிப்-படையைத் தகர்க்கிறது. எனவே-தான், பிளாஷ்-பேக்கின் முடிவு பார்வையாளனுக்குப் பெரிய அதிர்ச்சியையோ சுவாரஸ்-யத்தையோ ஏற்படுத்தவில்லை.பிற நாட்டு கடற்படையால் சுடப்--பட்டு இறக்கும் தன் கணவனின் மரணத்தை உலகுக்கு அறிவிக்காமல் ரகசியமாகப் புதைத்துவிடும்படி எஸ்-தரைச் செலுத்துவது எது? லூர்து-சாமியைச் செலுத்துவது எது? போஸ்மார்ட்டம் செய்து உடலைக் கிழித்து விடுவார்கள் என்று லூர்து---சாமி அழுது அரற்றுகிறார். இறந்த பின் உடல் கிழிபடும் என்று மீன-வன் அஞ்சுவானா? அஞ்சு-கிற--வன் இன்றளவும் உயிருக்கு உத்திர--வாதமில்லாத ஆழ்கடல் மீன்---பிடித் தொழிலில் துணிவுடன் ஈடுபடு-வானா?
“நீங்க 1000 பேர் சேர்ந்தா போராட்டம், நாங்க 100 பேர் சேர்ந்தா தீவிரவாதமா?’’ என்று இஸ்லாமியரான சமுத்திரக்கனி டீக்கடையில் அமர்ந்து பேசுகிறார். இஸ்லாமியர் என்றாலே தீவிர-வாதி-தான் என்கிற உளஅமைப்பு 1992 பாபர் மசூதி இடிப்பு, மும்பைக் கலவரம் இவற்றின் தொடர்ச்சியாக இந்துத்துவ அமைப்புகள், ஊடகங்--களால் இந்தியாவில் நிலை-பெறச் செய்யப்பட்ட ஒரு விஷயம். இவற்-றின் தாக்-கத்தால் இன்று ஒரு இஸ்லா-மியர் அப்படி ஒரு விமர்சனத்தை வைக்கமுடியும். 87இல் அப்படி பேசியிருக்க முடியுமா என்பதும் ஒரு முரண். சமகால அரசியல் விமர்-சனங்-களோடு தொழிற்படும் நீர்ப்-பறவை, பிளாஷ்பேக்காக இல்லாமல், ஒரு சமகாலக் கதைப் படமாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்சொன்ன காலகட்டங்கள் பற்றிய முரண்களை இயக்குனர் எளிதில் கடந்து சென்றிருக்க முடியும்.25 வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தைச் சித்தரித்துக் கதை சொ-ல்வது என்ற அடிப்படையில் இதேபோன்று 25 வருடங்களுக்கு முந்தைய சம்-பவங்களின் கோர்-வை-யாக எடுக்கப்பட்ட ‘சுப்ரமணிய-புரம்’ படம் நினைவுக்கு வரு-கிறது. 80இல் இருந்த மதுரை சுப்ரமணிய-புரம் பகுதிகளை அச-லாகச் சித்-தரிக்க அப்படம் எவ்-வளவு மெனக்-கெட்டிருக்கிறது என்பது நமக்கு முதல்முறை பார்க்கும்போதே தெரிந்துவிடும். ஒவ்வொரு பிரேமிலும் எந்தத் தவ-றான தகவல்களும் பின்புலமும் வெளிப்பட்டு விடாதபடிக்கு மிக நேர்த்தி-யான கடின உழைப்பு சுப்ர-மணிய-புரத்தின¢ ஆக்கத்தில் இருந்தது. அதுபோன்ற ஒரு அர்ப்-பணிக்கப்பட்ட உழைப்பையும் ஈடுபாட்டையுமே நீர்ப்பறவையின் கதைக்-களம் கோருகிறது. ஆனால், இயக்-குனர் மிக மேலோட்டமாக அதைச் செய்துள்ளார்.
கடலைப் போன்ற ஆழமான இப்பிரச்சினையில் இயக்குனர் தேர்ந்த ஒரு மீனவனைப் போல திரைக்கதை வலையைப் பின்னியிருக்கவேண்டும். அங்குதான் தவறிவிட்டார்.மீனவர்கள் சுட்டுக்கொல்லப்-படுவதன் பின்னணியில் ஒரு சர்வதேச அரசியல் இருக்கிறது. படகு முத-லாளிகளின் நெருக்கடி இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகளின் துரோகத்--தனம் இருக்கிறது. ஏற்று-மதியைக் குறிவைத்துக் கடல் வளங்களைச் சூறையாடிய ஒரு பன்-னாட்டு மூல-தன சதி இருக்-கிறது. எப்படி திருப்-பூரில் சாயப்பட்ட-றைகளின் வழியாக விவசாயம் பாழடிக்-கப்-பட்டுள்ளதோ, அதே-போன்றே ஏற்று-மதி வர்த்தக மீன்பிடியினால் நமது கடல்வெளி முற்றிலும வளங்கள் இன்றி துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. இதில் செயல்படும் கடைசிக் கண்ணி தமிழக மீனவன். தமிழகக் கரை-யோர வளங்களைச் சூறையாடி முடித்த-பின் வளங்கள் இருக்கிற பகு-திக்கு வலையை வீசுகிறான். சர்வதேச சமூகம் எல்லைகளைக் காண்பித்து துப்பாக்கியோடு எதிர்-கொள்கிறது.1980இல் மீன்பிடித் தடைக்காலம் இருப்பது போன்ற அறிவிப்பு வரும் காட்சியும் இதுபோன்ற ஒரு தவறுதான். மீன்பிடித் தடைக்காலம் (45 நாட்கள்) அமல்படுத்தப்பட்டது 1991க்குப் பிறகுதான்.
முற்பகுதியில் சொல்லியிருப்பது போல மீனவர்களின வாழ்வை, துயரை சமவெளி மனிதர்களுக்கு, அவர்-களும் அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு கலைப்-படைப்-பாகப் பரிமளித்திருக்க வேண்டிய நீர்ப்பறவை பல முரண்களைக் கடக்-கும் வெளியின்றி ‘கரைப்பறவை-யாக’ தத்துகிறது

கெளரவம் -இரட்டைக்குவளையின் நிழல்



தமிழ்ச் சமூகத்தில் ‘சாதி’ ஒரு தீர்மானகரமான சக்தி; சமூக, பண்பாட்டுத் தளங்களில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் செயல்படும் முதன்மையான கருதுகோள். இத்தகைய வலிமையான சாதியைப் பற்றி தமிழர்களின் விருப்பத்திற்குரிய கேளிக்கை ஊடகமான சினிமா வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஒருவேளை பேசினால்... ‘சூரிய வம்சம்’, ‘நாட்டாமை’, ‘சின்னக்கவுண்டர்’, ‘தேவர்மகன்’, ‘முதல் மரியாதை’, ‘பசும்பொன்’, ‘கோவில்’, ‘வேல்’, ‘சண்டைக்கோழி’, ‘வம்சம்’, ‘சுந்தரபாண்டியன்’... என்று ஆதிக்கச் சாதிக்காரர்களின் பண்பாட்டை விதந்தோதிதான் பேசியிருக்கிறது. தமிழ் சினிமா தொடர்ந்து பட்டியல் சாதியினரை இழிவாகவும் சுரண்டும் ஆதிக்கச் சாதியினரை பெருமிதமாகவுமே கதை செய்து வந்திருக்கிறது.

 குறிப்பாக ‘எஜமான்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘முதல் மரியாதை’ போன்ற படங்களில் தாழ்த்தப்பட்டோரை இழிவுசெய்யும் காட்சிகள் இருந்தபோதும் அவை எவ்வித எதிர்ப்புமின்றி வணிகரீதியில் வெற்றிகரமான படங்களாக அமைந்தன. விதிவிலக்காக, சாதிவாரியான பட்டியலில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பட்டியலிடப்பட்ட மக்களுக்கும் பண்பாடு, இசை, காதல், வாழ்க்கை என்பதெல்லாம் இருக்கிறது என்று தமிழ் சினிமா மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பேசியிருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று ‘கௌரவம்’ என்கிற சினிமாவின் வழியே இப்போது அமைந்திருக்கிறது. அவ்வகையில் ‘கௌரவம்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வரவு என்றே சொல்லலாம்.

ஒரு தலித் இளைஞன், ஒரு வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அண்மையில் வன்னியர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு சென்று தலித் மக்கள் வாழும் இடங்களில் குடிசைகளைத் தீயிட்டு, பொருட்களைச் கொள்ளையிட்டு, சூறையாடி ஒரு பெரிய காட்டு வன்முறையை நிகழ்த்தியதை நாமறிவோம். ஆதிக்கச் சாதியினரின் இதுபோன்ற வெறியாட்டங்கள் அவர்கள் வீட்டுப்பெண், தலித் இளைஞனைக் காதல் கொள்ளும் சமயங்களில் பெரும் வன்கொடுமையாக வெடித்து உயிர்களைப் பலிகொள் வதில் முடிகிறது. இது தமிழகம் என்றில்லை, இந்தியா முழுவதும் சாதி உணர்வில் இறுகியவர்களிடம் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த உறுத்தலுமின்றி பெற்ற மகளைக் கொன்றுவிட்டு ‘கௌரவக் கொலை’ என்று கௌரவமான பெயர் வேறு சூட்டிக் கொள்கிறார்கள். சற்றும் நாகரிகமில்லாத காட்டுமிராண்டித்தனம் எப்படி கௌரத்தில் சேரும் என்று தெரியவில்லை. ‘கௌரவம்’ படம் இதுபோன்ற கௌரவக் கொலைகளை சாதி மறுப்புக் கண்ணோட்டத்திலிருந்து பேசுகிறது. காதல் ஒரு குற்றமல்ல என்ற உணர்வு நிலையிலிருந்து, ‘கௌரவம்’ சாதி வன்முறையைப் பார்க்கிறது.

படத்தில் உயர்சாதிப் பெண்ணாக வரும் ராஜேஸ்வரி, சண்முகம் என்ற தலித் இளைஞனைக் காதலித்ததற் காக, ராஜேஸ்வரியின் அண்ணன் அவர்கள் இருவரையும் வெட்டிக் கொலைசெய்து ரகசியமாகப் புதைத்துவிடுகிறான். சண்முகத்தின் நண்பனான அர்ஜூன், சண்முகத்தை தேடி கிராமத்துக்கு வருகிறான். சண்முகமும் ராஜேஸ்வரியும் காணாமல் போயிருப்பதை அறிந்து, அர்ஜூனும் அவனது பார்ப்பன நண்பனான வெங்கியும் கிராமத்தில் ஆற்றோரத்தில் ‘டென்ட்’ அடித்து தங்கி, அதன் பின்னணியை ஆராய்கிறார்கள். ஒரு கட்டத்தில் வள்ளியின் ஆட்டிசம் பாதிப்புள்ள தம்பியின் ஓவிய நோட்டிலிருந்து கிடைக்கும் குறிப்புகளை வைத்து சண்முகமும் ராஜேஸ்வரியும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முடிவுசெய்து, நண்பர்கள் உதவியுடன் அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பதைக்  கண்டுபிடித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் கதை.

உயர் சாதிப்பெண்ணை தலித் இளைஞன் காதலிக்கும்போது வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி வந் துள்ள படங்களாக ‘பாரதி கண்ணம்மா’, ‘காதல்’, ‘கூடல் நகர்’ ஆகிய 3 படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. பாரதி கண்ணம்மாவில் பாரதி தற்கொலை செய்துகொள்கிறான். ‘காதல்’ படத்தில் முருகன் பெரிய வன்முறைக்கு ஆளாகி பைத்தியமாகிறான். கூடல் நகரில் அந்த இளைஞன் பேருந்தில் வைத்துக் கொல்லப்படுகிறான். இவற்றில் ‘காதல்’ ஆதிக்கச் சாதியினரின் கூட்டு வன்முறையை மிக சிறப்பாகக் காட்சிப்படுத்திய படம். தமிழ் சினிமாவில் முன்னும் பின்னுமாக ‘காதல்’ வெளிப்படுத்தும் சாதி 
வன்முறையின் நிதர்சனம் இதுரை வேறெப்போதும் நாம் திரையில் காணாதது.

‘கௌரவம்’ படத்தில் மாசி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அந்தக் கிராமத்தில் இரட்டைக்குவளை முறை இன்னும் நடைமுறையில் இருப்பதை சொல்லி அதிர்ச்சியூட்டுகிறது. சண்முகத்தைத் தேடி கிராமத்துக்கு வரும் அர்ஜுனும் வெங்கியும் கிராமத் தின் சாதி இறுக்கத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆதிக்கச் சாதிக்காரர்களில் ஒருவராக அல்லது அவர்களின் ஏவலாளாக அவ்வூரில் போலிஸ் இன்ஸ்பெக்டர் இருக் கிறார்.
ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருப்பதை வெளிப்படையாக இப்படம் பேசுகிறது. 

சேரி மக்களின் தரப்பில் சண்முகத்தின் தந்தை, மாசி, வள்ளி, அவளது ஆட்டிசம் பாதிப்புள்ள தம்பி என்று சில பாத்திரங்கள் அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாசி பாத்திரத்தில் வருபவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதிக்கச் சாதியினரின் தீ வைப்புக்கு சேரி ஆளான பின்பு சேரிமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மது அருந்தி விட்டு வரும் மாசி பேசும் வசனங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அறச் சீற்றமாக வெளிப்படுகிறது.
ஆனால், படத்தின் மையமான அரசியலில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துவதுபோன்ற மாசியின் பேச்சை இடை மறிக்கும் அர்ஜூனும் யாமினியும், மாசிக்கு புத்திமதி சொல்லும் காட்சிகள் இயக்குநரின் மேல்தட்டு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதோடு எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கிறது. தான் சென்னையில் வாழ்ந்த காலங்கள் குறித்து மிக மகிழ்ச்சியாக அதைப் பகிர்ந்துகொள்கிறான் மாசி. சென்னையை அன்னை என்கிற அளவில் பெருமிதத்துடன் சொல்கிறான். ஆனால், சென்னையிலும் சாதி இன்னும் நுட்பமான இடங்களில் / வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சென்னையில் இரட்டைக்குவளைதான் இல்லை; சாதி இருக்கத்தான் செய்கிறது.

சண்முகமும் ரஜேஸ்வரியும் சடலமாக மீட்கப்படும் காட்சி பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய ஒரு காட்சி. ஆனால், அப்படிப்பட்ட அனுபவத்தை படம் தரவில்லை. காரணம் சண்முகம், ராஜேஸ்வரியின் முகங்கள் காட்சிகளில் அழுத்தமாக வைக்கப்படவில்லை. ‘காதல்’ படத்தில் அவர்களின் விடலைக் காதலை ரசிக்கும்படியாக சொல்லிவிட்டு, பின் அவர்களின் மீது வன்முறை ஏவப்படும்போது படம் பார்ப்பவர் களுக்கு முருகன், ஐஸ்வர்யா தரப்பு நியாயங்களோடு படத்துடன் ஒன்ற முடியும். ஆனால், ‘கௌரவம்’ படத்தில் சண்முகம் ராஜேஸ்வரி காதல் ‘ஃளாஷ்பேக்’ முறையில்கூட காண்பிக்கப்படவில்லை. மாறாக கதைக்கு அவசியமற்ற அர்ஜூன், யாமினி காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரிய பலவீனம் என்று இதைச் சொல்லலாம்.

உண்மையில் படத்தின் நாயகனே சண்முகம்தான், நாயகி ராஜேஸ்வரிதான், அவர்களின் காதல்தான் கதையின் அச்சாணி என்கிறபோது அதைக் காட்சிகளில் விவரிக்காமல், அவர்கள் கொல்லப்படும் சம்பவத்தை மட்டும் அறையிருட்டில் காண்பிக்கும்போது, அந்தத் துயரில் பார்வையாளர்களால் முழுமையாக ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. படத்தின் பிரதான பாத்திரமான சண்முகத்துக்கு ஒரு குளோஸ் அப் காட்சிகூட இல்லை என்பது பெரிய அபத்தம். ராஜேஸ்வரியின் அண்ணனால் தாக்கப்பட்டுக் கொல் லப்படும் காட்சியில்கூட சண்முகத்தின் முகம் அரையிருட்டில் காண்பிக்கப்படுகிறது. ஒரு வசனம் கூட அந்த கேரக்டருக்கு இல்லை. திரைக்கதையின் பெரிய பலவீனம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். சண்முகம் என்பவனின் மரணம்தான் பார்வையாளர்களை திரை முன்பு ஆவலோடு உட்காரவைக்கும் என்னும் நிலையில், சண்முகம்  ராஜேஸ்வரி இருவரின் சித்தரிப்பு இருட்டடிக்கப்பட்டுள்ளது திரைக்கதையின் பெரிய பலவீனம்.

சண்முகம்  ராஜேஸ்வரி தரப்பு நியாயங்களை, அவர்களின் காதலை சொல்லி, படம் பார்க்கும் ஆண் தன்னை சண்முகமாகவும் பெண் தன்னை ராஜேஸ்வரியாகும் உணர வைக்கப்படும்போதுதான் அவர்கள் காதலும் மரணமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். படத்தை வெற்றிப்படமாக ஆக்கியிருக்கக் கூடிய விஷயம் அதுதான். ராதாமோகன் இந்தச் சித்தரிப்பில் கோட்டை விட்டிருக்கிறார்.

படத்தில் நமக்கு ஈர்ப்பு இல்லாமல் செய்யும் அடுத்த காரணி அர்ஜூனாக வரும் நடிகர். அறிமுக நடிகரான இவரது பங்களிப்பு இந்தக் கதைக்குப் போதுமானதாக இல்லை. அர்ஜூன் பாத்திரத்தில் நமக்கு அறிமுகமான, தமிழ்நாடு சாயலுள்ள இளைஞன் தோற்றத்தில் யாராவது நடித்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிட தோதாக அல்லு சிரிஷ் என்ற கதாநாயகனை தமிழில் அறிமுகம் செய்து ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். அவர் தனது பாத்திரத்தின் தன்மையே தெரியாமல் இன்ஃபோசிஸ் ஊழியரைப்போல வந்துபோகிறார். கல்லூரி நண்பர்கள் கூட்டத்தில் ஒரு டர்பன் கட்டிய சிங்கைக் காண்பிப்பது, மாணவர்களின் குரூப் டான்ஸ், மீடியா படையெடுக்கும் காட்சி, அர்ஜுன்  யாமினி காதலின் நாடகத்தன்மை போன்றவை ஒரு வேளை இந்தப் படம் தோற்றால் அதற்கான காரணங்களில் சிலவாக அமையக்கூடும்.

கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் முகாமிடுவது, அதைத் தொடர்ந்து கிராமத்துக்கு மீடியாக்கள் படையெடுப்பது போன்ற காட்சிகள் மிக செயற்கையாக இருக்கின்றன. அண்மையில் நடந்த தர்மபுரி வன்முறைகளின்போது மீடியா என்ன பாத்திரம் வகித்தது என்பதைக் கண்கூடாகக் கண்டோம். யதார்த்தத்தில் கிராமங்களில் நடைபெறும் இதுபோன்ற சாதி வன்கொடுமைகளில் ஆதிக்கச் சாதிப் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ராஜேஸ்வரி குடும்பத்திலுள்ள அவரது அம்மா, அண்ணி இருவரும் ராஜேஸ்வரி கொல்லப்பட்டதை ஏற்காதவர்களாக காண்பிக்கப்படுவது நம்ப முடியாததாக இருக்கிறது. ‘காதல்’ படத்தின் இறுதிக்காட்சி இதை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தது
மேலும், படத்தில் வன்முறையை உற்பத்தி செய்யும் களமான ஆதிக்க சாதி ஊர் மனிதர்களின் பங்கேற்பும், அதை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுவிட்ட சேரி மனிதர்களின் எதிர்வினை முகபாவங்களும் வசனங்களும் திரைக்கதையில் நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை. அவர் களும் வெறுமனே வந்துபோகிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் கூட்டு வன்முறையின் உச்சபட்ச வடிவமே கௌரவக் கொலைகள். ஆனால், இந்தப் படம் இத்தகைய கொலைகளைக் குடும்பத்திலுள்ள ஒருவனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவாகக் காட்டுகிறது. ராஜேஸ்வரியின் தந்தையாக பசுபதி பாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் இக்கொலையை மகனுக்கு மூடி மறைக்கிறவராக காண்பிக்கப்படுகிறது. கூட்டு வன்முறையில் ஈடுபடும் ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக, கூட்டு அபராதம் போன்ற அரசியல் தீர்வு களும், வன்கொடுமை தடுப்பு யுக்தி களும் பரிந்துரைக்கப்பட்டுள்ள விழிப்புபெற்ற காலகட்டத்தில் கௌரவக் கொலைகளை தனிப் பட்ட, உணர்ச்சிவயப்பட்ட செயல் பாடுகளுள் ஒன்றாக காண்பிக்கப் படுவது கௌரவம் படத்தின் மிகப் பெரிய பிழை.

குறிப்பாக சேரி தீக்கிரையான பின்பு மக்கள் குழுமியிருக்கும் காட்சியில் மாசி பேசுவதன் எதிரொலியாக பல் வேறு தலித் குரல்களை ஒலிக்கச் செய்திருக்கக் கூடிய சாத்தியங்கள் இத்திரைக்கதைக்குள் சாத்தியம். ஆனால், இயக்குநர் அவர்களை மாபெரும் மௌனத்தில் ஆழ்த்துகிறார்.

இப்படத்தின் விளம்பர போஸ்டர்களில், ஈழத்தின் முள்வேலி முகாம் களை நினைவுபடுத்தும்விதமாக, முள்வேலி வளையத்துக்குள் படத்தின் கதாபாத்திரங்கள் நிற்பதுபோன்று காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பிரச்சனை முள்வேலி தடுப்பு அல்ல, உத்தப்புரம் போன்ற சுவர்கள்தான். அச்சுவர்களும்கூட இத்திரைக்கதைக்குள் வரவில்லை. தர்மபுரி சேரி எரிப்பை நினைவூட்டும் காட்சிகள் படத்தில் இருப்பதால், அதை மையப்படுத்தி, எரிக்கப்பட்ட சேரியின் பின்னணியில் கதாபாத்திரங்கள் உலவுவதான போஸ்டர்களைக்கூட ராதாமோகன் யோசித்திருந்திருக்கலாம்.

சண்முகம் என்கிற தலித் நண் பனின் சாவுக்கு அர்ஜூன் என் கிற பிற்பட்ட சாதி இளைஞன் நீதிகேட்டுப் போராடுவதில் இரண்டு செய்திகள் உள்ளன. தலித்துகள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து பிற்பட்ட சாதியிலுள்ள முற்போக்கு ஆற்றல்களும் பணியாற்ற வேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று சிக்கலான ஒன்று. தலித் மக்களுக்காக கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி சிந்தனையாளர்கள், திராவிட இயக்கங்கள் போராடியதன் தொடர்ச்சியில் இன்று தலித்துகளே தங்களுக்கான இயக்கங்களைக் கட்டியெழுப்பியுள்ளனர். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளில் இத்தகைய இயக்கங்களின் முன்முயற்சியாலேயே அவை வெளியுலகத்துக்கு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நண்பன் என்கிற அடிப்படையில் அர்ஜூன் இப்பிரச்சனைக்காகப் போராடுவதாகக் காட் டப்படும் சமகாலக் கதையில் எங்குமே தலித்துகளின் திரளான பங் கேற்பு, அரசியல் அமைப்புகளின் பங்கேற்பு இல்லாதது போல காண்பித்திருப்பதை, வணிக சினிமா வின் சமரசங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்வதா? திரைக்கதையின் சறுக்கலாக எடுத்துக் கொள்வதா?

 இயக்குநர் சாக்குத்துணியால் மறைக்கப்பட்ட அம் பேத்கர் சிலையை நுட்பமாக காட்சிப்படுத்தவும் செய்கிறார். அதே வேளையில், அம்பேத்கரை கொண்டாடி பிளக்ஸ் போர்டுகள் வைத்து அடையாளப்படுத்திக் கொள்வது தற்கால நிதர்சனமாக உள்ள நிலையில் அப்படிப்பட்ட அடையாளம் இல்லாத சேரியாக ஒன்றை இப்படம் காண்பிக்கிறது.
நான் முதலில் குறிப்பிட்டதுபோல சாதி வன்முறையின் குறிப்பிடத்தகுந்த ஒரு கலை ஆவணமாக ‘கௌரவம்’ படத்தை ஏற்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. நல்ல படம் என்று சொல்லிவிட்டு அதன் குறைகளைப் பட்டியலிடுவது நமது நோக்கமும் அல்ல. அரிதிலும் அரிதாக தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகரமான முயற்சிகளாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்கிற பதற்றமே இவ்விமர்சனம்.

இதைப்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதை கொண்ட படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறும் அனைத்து தந்திரங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஏனெனில், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள ரிஸ்க்  அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக் களத்தின் தன்மை அப்படிப்பட்டது.

இத்தகைய படங்கள் வணிக சமரசங்களுடன் வெற்றிப்படமாக பட்டிதொட்டி, ட்டி.டி.ஹெச், டிவி, இணையம் என்று எங்கும் பரவவேண்டியது அரசியமும்கூட. அவ்வாறு வெற்றிபெறுவதன் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் பேசாத பகுதி களைப் பேச மற்றவர்களும் முயற்சி செய்வார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள், வரவேற்பைப் பெறாமல் பெட்டிக்குள் முடக்குவதிலுள்ள அபத்தமும் நிதர்சனமும் கவலைக்குரிய அம்சங்கள்.

 நான் இந்தப் படத்தை என் நண்பருடன் வெளிவந்த அன்றே மாலைக்காட்சியில் பார்த்தேன். மதுரையில் புகழ்பெற்ற நவீன 7.1 ஒலி அம்சங்களைக் கொண்ட அந்த திரையரங்கில் எங்களோடு சேர்த்து ஒரு 200 பேர் படம் பார்த்திருந்தால் அதிசயம். பெரிய நிறுவன தயாரிப்பு என்றாலும் இப்படத்துக்கு போதுமான அளவில் விளம்பர முயற்சிகள் செய்யப்படவில்லை. பிரகாஷ்ராஜ், ராதாமோகன் இருவரும் கலந்துகொண்ட ‘நீயா நானா’ விஜய் டிவி நிகழ்ச்சியே இப்படத்துக்கு கிடைத்த குறிப்பிடும்படியான விளம்பரம்.

குறைகள் இருந்தாலும் ஆட்டிசம் தொடர்பான கவனம் குவிப்பது, ஊர் சேரி முரண்பாட்டை துல்லியமாக பேசு பொருளாக்கியது, தீண்டல் தீண்டாமையில் ஆதிக்கச் சாதியினர் கைக்கொள்ளும் அயோக்கியத்தனத்தை தலித் பாத்திரங்களின் விமர்சனமாகக் கதைக்குள் வைத்தது... என்று பல தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக வந்திருக்கும் தமிழ் சினிமா என்றுதான் ‘கௌரவம்’ படத்தைச் சொல்ல வேண்டும்.



3